பள்ளிக்கரணை - சதுப்பு நிலக்காடுநாம் பயணிக்கும் பாதை ஒருநாளும், ஒருநாள் போல் மற்றொருநாள் இருப்பதில்லை. கவனிக்க யாருமற்று, எண்ணற்ற மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டே தான் இருக்கின்றன.

அலுவலகம் பயணிக்கும் பாதையொன்றில் நிகழ்ந்த அனுபவம் தான் இந்த கட்டுரையின் தொடக்கம்.
பள்ளிக்கரணை - துரைப்பாக்கம் இணைப்புச்சாலை - அலுவலகம் செல்ல ஒவ்வொரு நாளும் கடந்து செல்லும் பாதை, "சதுப்பு நில வனப்பகுதி" "பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி" போன்ற அறிவிப்பு பலகைகளும் "பறவைகள் வாழிடம் -இங்கு குப்பை கொட்டாதீர்கள்" என தென்சென்னையின் மிகப்பெரிய குப்பைமேட்டின் முகப்பில் வைக்கப்பட்டிருக்கும் "நையாண்டி" பலகைகளும் நிரம்பிய சாலை. இருபுறமும் சதுப்பு நிலம் - அதாவது நீரும் மண்ணும் இணைந்து சகதிக்குழம்பு சமைத்திருக்கும் நிலம். அட்டகாசமாக போடப்பட்டிருக்கும் இந்த சாலையில் பயணிக்கையில் வேகம் எவ்வளவு என கவனிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. கோரைப்புற்களும், அதில் கூடு கட்டி வாழும் பறவையினங்களும் நிரம்ப காட்சி தரும் இந்த நூறு அடி சாலையின் மீதான பயணம். ஆக்கிரமிப்புகள் போக எஞ்சியிருக்கும் இந்த நிலப்பகுதி தான் ஆக்கிரமிப்புகள் ஏற்படும் முன்பு சென்னையின் வெள்ளநீர் வடிகால் என்பது கூடுதல் தகவல். இந்த சதுப்பு நிலத்தில் ஆக்கிரமித்து  கட்டப்பட்டிருக்கும் ஒவ்வொரு கட்டடமும் சென்னையில் குறிப்பாக தென்சென்னையில் வெள்ளம் வரும் போதெல்லாம் சபிக்கப்பட வேண்டியவைகள்.
இந்த சாலை வழியாகத்தான் தினமும் பயணிக்கிறேன். எந்த அசோகர் நட்டாரோ தெரியாது, வலப்புற சாலையோரம் வரிசையாய் மரங்கள் நடப்பட்டிருக்கும். இடப்புறம் அழகாக(?) குப்பை கொட்டி வைத்திருப்பார்கள்.

குப்பை கொட்டுவதற்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் இடப்பற்றாக்குறையோ இல்லை வேறு என்ன குறையோ இங்கு சாலையில் கொட்டி வைத்திருக்கிறார்களே என பலமுறை யோசித்ததுண்டு. கடந்த இரு வாரங்களாகத்தான் அதன் சூட்சமம் புரியத் தொடங்கியது. மேடாக கொட்டியிருந்த குப்பைகளை எல்லாம் நிரவியிருக்கிறார்கள். கிட்டத்தட்ட சாலையை விட்டு இருபது அடி அகலத்திற்கு நிரவி சாலை மட்டத்திற்கு சமன் செய்துள்ளார்கள். இன்னும் தெளிவாக சொல்வதென்றால் சாலையின் இடப்புறம் ஆக்கிரமித்திருக்கிறார்கள். அங்கங்கே இருபுறமும் நீர் செல்ல அமைக்கப்பட்டிருக்கும் குழாய்களின் அருகிருந்து பார்க்கும் போது இது நன்றாக தெரியும்.

இன்னும் சில வாரங்களில் நிரவப்பட்டிருக்கும் இந்த குப்பைகளின் மீது மெல்ல மண் கொட்டி நிலமாக்குவார்கள் , பின்னர் அங்கொன்றும் இங்கொன்றுமாக யாரவது குடிசை போடுவார்கள், குடிசைகள் பின்னர் "பெட்டிக்கடைகள்" "பலரசக்கடைகள்" "பலசரக்குக்கடைகள்" என விற்பனை மையங்களாகும். குடிசைகள் திடீரென "கான்க்ரீட்" கட்டடங்களாகும். மின்வசதி, குடிநீர்வசதி எல்லாம் அரசாங்க அலுவலகங்கள் வழங்கும். சில ஆண்டுகளில் இந்த இடப்புற சாலை முழுக்க கட்டடங்கள் நிரம்பி இருக்கும்.அதாவது முறைப்படி ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும்!

இதெல்லாம் அதீத கற்பனை, வீண் பயம் என்பவர்களுக்கு சொல்லவிரும்பவது இதுதான். "நில ஆக்கிரமிப்பு செய்வதில் நம் தாத்தா காலத்திய முறையிது". தமிழகத்தில் நாம் தொலைத்த பல்லாயிரக்கணக்கான ஏரிகள் இப்படித்தான் குடியிருப்பு பகுதிகள் ஆயின.

தன் நிலை விளக்கும் படங்கள் சில!பள்ளிக்கரணை சதுப்புநில காடுகள் பற்றி விரிவாக அறிய இங்கு சொடுக்கவும்

0 comments:

Post a Comment

வணக்கம்

என் வலைப்பூவிற்கு வந்துள்ள உங்களை மனமார வரவேற்கிறேன்!

என்னை பற்றி !

My photo
சிறிது அறிவும், நகைச்சுவை உணர்வும், ரசனையான வாழ்வும் சேர்ந்த சித்திரம்!